பாம்பு குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கிய 5 வாகனங்கள்


பாம்பு குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கிய 5 வாகனங்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:29 PM IST (Updated: 4 Jan 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பாம்பு குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கிய 5 வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூரில் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு நேற்று காலை 9 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு பொருட்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர், பாம்பை கண்டதும் பிரேக் பிடித்தார். இதில் லாரியில் இருந்த இரும்பு பொருட்கள் சாலையில் விழுந்தன. 
அந்த சமயத்தில் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவரும் உடனடியாக பிரேக் பிடித்தார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், டயர் வெடித்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையின் மீது ஏறி மறுபுறம் உள்ள உளுந்தூர்பேட்டை-விழுப்புரம் சாலைக்கு சென்று தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. அப்போது உளுந்தூர்பேட்டை சாலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை  எதிர்பாராத விதமாக அந்த அரசு பஸ் மீது மோதியது.  அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த காமராஜ் (வயது 55), கண்டக்டரான மதுரை மாவட்டம் டி.பெருமாள் பட்டியை சேர்ந்த நீதிபதி பாண்டியன்(36), ஆட்டோ டிரைவரான விழுப்புரம் பூந்தோட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் அறிவரசன்(31), மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story