கிராமங்கள் வளர்ச்சி பெற அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்
கிராமங்கள் வளர்ச்சி பெற அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று லா.கூடலூரில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருக்கோவிலூர்,
ரிஷிவந்தியம் அருகே லா.கூடலூா் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகையை பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் கொண்டாடவேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 9 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ரூ.22¾ கோடி
இந்த திட்டம் தற்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து 122 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.22 கோடியே 72 லட்சம் செலவில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 453 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. கிராமங்கள் வளர்ச்சி பெறும் வகையில் மீண்டும் நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆதரவு தரவேண்டும்
நாட்டின் வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த நல்லாட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story