கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நகர்நல அலுவலர் ஒருமையில் பேசியதாக புகார்
நகர்நல அலுவலர் ஒருமையில் பேசியதாக கூறி, கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாநகராட்சியில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, இணை இயக்குனர் விஜயகுமார், மண்டல இயக்குனர் சசிகலா ஆகியோர் நேற்று ஆய்வு செய்வதற்காக கடலூர் வந்தனர். அப்போது அவரை சந்தித்து தங்களின் குறைகளை சொல்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வந்தனர்.
அவர்களை நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி ஒருமையில் பேசி, அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் ஒருமையில் பேசிய நகர்நல அலுவலர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தங்களுக்கு குப்பை அள்ள வண்டிகளை தர வேண்டும். கையுறை போன்ற உபகரணங்களை தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
பரபரப்பு
தகவல் அறிந்ததும் நகராட்சி இணை இயக்குனர் விஜயகுமார் ஆணையாளர் அறைக்கு சென்று தூய்மை பணியாளர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களின் குறைகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இதை கேட்டதும் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் தூய்மை பணியாளர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story