விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு விருத்தாசலம் மட்டுமின்றி உளுந்தூர்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை மார்க்கமாக இயங்கும் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் கல்லூரி முடிந்ததும் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்வதற்கு முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களில் பயணிகள் அதிகளவில் இருந்ததால் அதில் இடம் இல்லாமல் இருந்தது.
மேலும், தாங்கள் வழக்கமாக செல்லும் தடம் எண் 16 என்ற டவுன் பஸ் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி திடீரென பஸ் நிலையத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story