ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.28 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.28 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:11 PM IST (Updated: 4 Jan 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தமிழக அரசு 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிபருப்பு, 100 கிராம் நெய், 100 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மல்லித்தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைப்பருப்பு, 500 கிராம் உளுத்தம்பருப்பு, 1 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை மாவு, 500 கிராம் உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முதல் வினியோகம் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 15 ஆயிரத்து 235 அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மக்களின் கோரிக்கைகளை திட்டமாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், பெண்கள், திருநங்கைகளுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழக இளைஞர்களை தமிழக அரசு வேலைகளில் பணியமர்த்தும் வகையில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேளாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் ஏற்றம் காண வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், தொழில் வளம் பெற வேண்டும். தமிழகம் முன்னேற வேண்டும், தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story