மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2022 11:16 PM IST (Updated: 4 Jan 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, யாரோ மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் மத்தியபாகம் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் புதியம்புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பெரியராமர் (28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.  உடனடியாக போலீசார் பிடிபட்ட பெரியராமர், மோட்டார் சைக்கிளை மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியராமரை கைது செய்தனர். மோட்டார் திருட்டு நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story