வக்கீல் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சா?


வக்கீல் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சா?
x
தினத்தந்தி 4 Jan 2022 11:37 PM IST (Updated: 4 Jan 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே வக்கீல் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே வக்கீல் சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒன்றிய செயலாளர் கொலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதியை சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளராக இருந்து வந்த இவர் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய மகன் தமிழ்ஸ்டாலின் பாரதி (வயது35). வக்கீல். 
இவர் நேற்று இரவு நீடாமங்கலம் கடைத்தெருவிற்கு மருந்து வாங்க வந்தார். கடையில் மருந்து வாங்கிக்கொண்டு ஒளிமதியில் உள்ள வீட்டிற்கு தனது காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார். கற்கோவில் ஒத்தபாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த ஒளிமதி கிராமத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர், நீடாமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) இமயவர்மன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 
மறியல் காரணமாக நீடாமங்கலம்- திருவாரூர் சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீசார் சிறிய மதுபாட்டில் ஒன்றை கைப்பற்றினர். 

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பதை அறிய அங்கு தடவியல் ஆய்வு செய்யப்போவதாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் ஒளிமதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story