கொள்முதலுக்காக காத்திருக்கும் நெல் குவியல்


கொள்முதலுக்காக காத்திருக்கும் நெல் குவியல்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:40 PM IST (Updated: 4 Jan 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

தேவதானம், சேத்தூர் பகுதிகளில் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல்லை குவித்து வைத்துள்ளனர்.

தளவாய்புரம், 
தேவதானம், சேத்தூர் பகுதிகளில் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல்லை குவித்து வைத்துள்ளனர். 
நெல் கொள்முதல் நிலையம் 
தேவதானம், சேத்தூர் பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த புரட்டாசி மாதம் நெல் சாகுபடி செய்தனர். 
 தற்போது நெல் அறுவடை செய்யும் காலம் என்பதால் இவர்கள் மும்முரமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் இந்த பகுதிகளில் இன்னும் திறக்காததால் சில விவசாயிகள் தனியாரிடம் தங்களின் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
அறுவடை 
இதுகுறித்து  தேவதானம் விவசாயிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டு இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் ஜனவரி மாதம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 
கடந்த புரட்டாசி மாதம் இந்த பகுதியில் நெல் பயிரிட்டவர்கள் தற்போது அதனை எந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இன்னும் இங்குள்ள கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சில விவசாயிகள் தனியாரிடம் நெல் மூடை (72 கிலோ) ரூ. 1,100-க்கு கொள்முதல் செய்தனர். தமிழக அரசு கடந்த ஆண்டு நெல் மூடை ரூ.1,500-க்கு கொள்முதல் செய்தது.
 இதனால் நாங்கள் தற்போது அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைத்திருக்கிறோம். எனவே மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக தேவதானம், சேத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story