வாணியம்பாடி பாலாற்றில் தனியாக பாதை அமைத்து தொடர் மணல் கொள்ளை


வாணியம்பாடி பாலாற்றில் தனியாக பாதை அமைத்து தொடர் மணல் கொள்ளை
x
தினத்தந்தி 4 Jan 2022 11:51 PM IST (Updated: 4 Jan 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பாலாற்றில் தனியாக பாதை அமைத்து நடைபெறும் தொடர் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி பாலாற்றில் தனியாக பாதை அமைத்து நடைபெறும் தொடர் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மணல் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றின் கரையோர பகுதிகளான கச்சேரி சாலை, மேட்டுபாளையம், உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக மண் சாலை அமைத்து லாரி, டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்கள் மூலம் இரவு, பகல் பாராமல் மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் செல்கிறது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு யூனிட் மணல் ரூ.12 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளும் மணல் கொள்ளையர்கள், நூதன முறைகளில் மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தடுக்க வேண்டும்

பல வருடங்களாக, பாலாற்று பகுதிகளில் மணல் திருடி வந்த நிலையில், தற்போது ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கச்சேரிசாலை, உதயேந்திரம் மறுகரையில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக தங்களது சொந்த செலவில் மண் சாலை அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கொள்ளையர்கள், ஆற்றங்கரையோர பகுதிகளில் சுமார் 15 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில், தொடர்ந்து வாகனங்கள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், கச்சேரி சாலை பகுதியில் மட்டும் 500 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக 15 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளை நடைபெற்று உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் பல லட்சம் யூனிட் மணல் இதுவரை திருடப்பட்டிருப்பதாகவும், இதனால், அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story