குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:53 PM IST (Updated: 4 Jan 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் சப்ளை நிறுத்தம்

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியாத்தம் நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் பல இடங்களில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இரண்டு மாதத்திற்கும் மேலாக குடியாத்தம் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு, தற்போது அந்த பைப்புகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பசுமாத்தூர் அருகே பாலாற்றில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறுகளும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால்  இங்கிருந்தும் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. குடியாத்தம் நகராட்சி சார்பில் டிராக்டர்கள் மூலம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இது போதுமான அளவில் இல்லை எனவும், தரமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று மாலையில் குடியாத்தம் பிச்சனூர் நரி குள்ளப்ப தெரு, ஆர்.வி.கோபால் தெருவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் சீரான குடிநீர் வழங்கக் கோரியும், டிராக்டர்கள் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீர் சுத்தமான தரமான குடிநீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தி குடியாத்தம்-பலமநேர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில தினங்களில் பசுமாத்தூர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மற்றொரு இடத்தில்

சாலை மறியல் கைவிட்ட சில நிமிடங்களில் சற்று தொலைவில் பிச்சனூர் அப்புசுப்பையர் தெரு மற்றும் வளையல்கார சந்து பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி அலுவலகம் வருமாறும், அங்கு அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினை குறித்து பேசலாம் என சமாதானம் செய்தனர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்தடுத்து சாலை மறியலால் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றிருந்தன. 

Next Story