தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 11:57 PM IST (Updated: 4 Jan 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சேதமான பள்ளி கட்டிடம் 

  தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதாகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் உள்ள இரண்டு கட்டிடம் சேதமடைந்து மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்ததால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த கட்டிடத்திற்குள் ஆபத்தை உணராமல் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். எனவே பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி சேதமான கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -குமரேசன், வாணாபுரம்.
  

கால்வாய் வசதி தேவை

  ராணிப்பேட்டை மாவட்டம் மேல்களத்தூர் ஊராட்சி கணக்குப்பிள்ளை தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அங்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெலளியேறும் கழிவுநீர் தெருவில் தான் தேங்குகிறது.
  இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கணக்குப்பிள்ளை தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -வக்கீல் செ.பழனி, மேல்களத்தூர்.
  

மழைநீரை வெளியேற்ற வேண்டும் (படம்)

  ரத்தினகிரியில் இருந்து வேலூர் நோக்கி வரும் வழியில் பூட்டுதாக்கு சாலை ஓரம் ராஜீவ் காந்தி தெரு உள்ளது. இந்த தெரு முழுவதும் கடந்த சில மாதங்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். தண்ணீரை வடிய வைத்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -மோகனசுந்தரம், பூட்டுத்தாக்கு.
  

பயணிகளுக்கு நிழற்குடை வசதியில்லை

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கேளூர்-சந்தைமேடு சாலையில் உள்ள சித்தேரி காலனியில் பஸ்சுக்காக காத்திருப்பவர்களுக்கு நிழற்குைட வசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் பயணிகள் நிழற்குடையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -செந்தில்குமார், கேளூர்.
  
  

குப்பைகளை எரிப்பதால் பாதிப்பு 

  அரக்கோணம் ஏ.என்.கண்டிகை செவன் ஹவுஸ் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் செடிகள் வளர்ந்து புதர்களாக உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி எரித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் புகைமூட்டத்தால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். துர்நாற்றமும் வீசிவருகிறது. புதர்களை அகற்றி, குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
  -சரன்குமார், அரக்கோணம்.
  

குடிநீர் வழங்க வேண்டும்

  கீழ்பென்னாத்தூர் வட்டம் மேக்களூரை அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தில் குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை. இதை கண்டித்து 20-ந் தேதி சாலை மறியல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. அதன்பின் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொடர்ந்து குடிநீர்வழங்க வேண்டும்.
  -சரவணன், கத்தாழம்பட்டு.

மின்கம்பம் சீரமைக்கப்படுமா? 

  வாணியம்பாடி பிரதான சாலையான சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, வாரச்சந்தை ரோடு, ஆஸ்பத்திரி ரோடு ஆகியவற்றை இணைக்கும் இடத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள மின்விளக்கை சுற்றிலும் சிலந்தி வலை காணப்படுகிறது. பல மாதங்களாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் தெருவிளக்கு எரிந்தாலும் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  -கண்ணன், வாணியம்பாடி.

Next Story