ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3¼ பவுன் நகை பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம்  3¼ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 12:13 AM IST (Updated: 5 Jan 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3¼ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அருமனை:
அருமனை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3¼ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 
ஸ்கூட்டரில் சென்ற பெண்
அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் ஓமனா(வயது 58). இவர் நேற்று முன்தினம் மாலை குலசேகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். 
பின்னர், அவர், தன்னுடைய கணவரின் தம்பி மனைவியுடன் குலசேகரத்தில் இருந்து ஸ்கூட்டரில் அருமனை வழியாக வந்து கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
 அருமனை அருகே உள்ள மாறப்பாடி பாலம் பகுதியில் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஸ்கூட்டரின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த மர்ம நபர் திடீெரன ஓமனாவின் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓமனா நகையை பிடித்துக்கொண்டு திருடன்...திருடன்... என்று கூச்சல் போட்டார்.
இந்தநிலையில் நகை இரண்டாக அறுந்து 3¼ பவுன் கொள்ளையர்கள் கைக்கு சென்றது. மீதி நகை மட்டுமே ஓமனாவிடம் இருந்தது. இந்த சம்பவத்தில் ஸ்கூட்டர் நிலைதடுமாறியதால் ஓமனாவும், அவருடன் வந்த பெண்ணும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். 
கேமரா காட்சி ஆய்வு
பின்னர், இதுபற்றி ஓமனா அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Next Story