நாமக்கல் மாவட்டத்தில் 5.37 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-வழங்கும் பணி-அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
நாமக்கல் நகராட்சி முல்லை நகர் ரேஷன் கடையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாவட்டத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.28 கோடியே 91 லட்சம் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விதமாக 25 ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கினார்.
5.37 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள்
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 37 ஆயிரத்து,510 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று ஆகிய 20 பொருட்கள் மற்றும் ஒரு முழுக்கரும்பு என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை இடம் பெற்று இருந்தது. தற்போது மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் அதை வெல்லமாக வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story