41 பயணிகளுடன் குஜராத் சுற்றுலா பஸ் திருச்சியில் சிறைபிடிப்பு


41 பயணிகளுடன் குஜராத் சுற்றுலா பஸ் திருச்சியில் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 12:23 AM IST (Updated: 5 Jan 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது, மாநில நுழைவு வரி செலுத்தாத குஜராத் சுற்றுலா பஸ், 41 பயணிகளுடன் சிறை பிடிக்கப்பட்டது.

சோமரசம்பேட்டை, ஜன.5-
திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது, மாநில நுழைவு வரி செலுத்தாத குஜராத் சுற்றுலா பஸ், 41 பயணிகளுடன் சிறை பிடிக்கப்பட்டது.
வாகன தணிக்கை
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை வட்டார போக்குவரத்து அலுவலர், தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி அருகே சமயபுரம் சுங்கச்சாவடியை கடந்து திருச்சி மாநகர் நோக்கி வருகிற வாகனங்களை சுங்கச்சாவடியில் மடக்கி, தணிக்கை செய்யும் பணியில் அக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் ஆம்னி பஸ்களை நிறுத்தி வாகன பதிவெண், முறையான ெபர்மிட் உள்ளதா? என்றும், வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.
41 பயணிகளுடன் பஸ் சிறைபிடிப்பு
அப்போது குஜராத் மாநில பதிவெண் கொண்ட ஆம்னி சுற்றுலா பஸ் ஒன்று 41 பயணிகளுடன் வந்தது. குஜராத் மாநிலத்திலிருந்து 10 நாட்களுக்கும் மேலாக சுற்றுலா ஆம்னி பஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு, தற்போது திருச்சி வழியாக ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  அந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி, பறக்கும்படை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆம்னி பஸ்சுக்கு, முறையான மாநில நுழைவு வரி செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, 41 பயணிகளுடன் பஸ் சிறை பிடிக்கப்பட்டு, திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ரூ.40 ஆயிரம் அபராதம்
பின்னர், மாநில நுழைவு வரி செலுத்தாத ஆம்னி பஸ் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால், உடனடியாக உரியத்தொகைைய செலுத்த முடியவில்லை. அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் சுற்றுலா வந்த குஜராத் பயணிகள், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலேயே உறக்கமின்றி தவித்தனர். பயணிகளில் அதிகம் பேர் பெண்கள் என்பதால், உடனடியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை ஆன்லைன் பரிமாற்றம் மூலம் அபராதத்தொகை ரூ.40 ஆயிரத்து 50 செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு குஜராத் மாநில ஆம்னி சுற்றுலா பஸ் விடுவிக்கப்பட்டது. பின்னர் பயணிகளுடன் பஸ், ராமேசுவரம் புறப்பட்டு சென்றது.

Next Story