‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மோசமான சாலை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் கோவில் அருகில் உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. குண்டும், குழியுமான இப்பகுதியில் செல்லும் போது சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, மதுரை.
நாய்கள் தொல்லை
விருதுநகர் நகராட்சி சிவகாமிபுரம், பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தெருக்களில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் விபத்துகளும் நிகழ்கின்றது. நகராட்சி அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இக்ஸானுல்லாஹ், விருதுநகர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள சில கடைகள் மற்றும் உணவகங்களில் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகிறது. அரசு இதனை தடைசெய்தும் சில கடைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
சுகாதார வளாகம் தேவை
விருதுநகர் மாவட்டம் விழுப்பனூர் கிராமத்தில் கிருஷ்ணன்கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் சுகாதார வளாகம் வசதி இல்லை. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இங்கு சுகாதார வளாகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விழுப்பனூர்.
மதுக்கடைகள் அகற்றப்படுமா?
மதுரை பைபாஸ்ரோடு குரு தியேட்டர் எதிரே பஸ் நிறுத்தம் அருகில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் ஆஸ்பத்திரி ஒன்றும் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே, இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மதுரை.
சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சியில் ரேஷன்கடை உள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் இடியும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சப்படுகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை அகற்ற வேண்டும்.
கவுரிநாகன், சோழவந்தான்.
Related Tags :
Next Story