கர்நாடகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கர்நாடகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்படுகிறது.
பெங்களூரு:
புதிய கட்டுப்பாடுகள்
நேற்று ஒரே நாளில் 100 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. இதை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். அதனால் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா, நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிபுணர் குழுவினர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. 2½ மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
147 பேருக்கு ஒமைக்ரான்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. இதில் மந்திரிகள், நிபுணர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், மேற்கு வங்காள மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இந்த ஒமைக்ரான் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் கூறினர். பெங்களூருவில் இன்று (நேற்று) மட்டும் 3,048 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 147 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 5, 6 நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த கொரோனா பாதிப்பு பெரிய நகரங்களில் தான் அதிகமாக உள்ளது. கர்நாடகத்தில் பெங்களூருவில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மொத்த பாதிப்பில் 85 சதவீதம் பெங்களூருவில் பதிவாகிறது. அதனால் பெங்களூருவுக்கு மட்டும் தனியாக வழிகாட்டுதலை வெளியிட முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் தனியாக வழிகாட்டுதல் வெளியிடுகிறோம்.
நேரடி வகுப்புகளுக்கு தடை
இந்த ஒமைக்ரான் வைரஸ் 20 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களை தான் அதிகமாக தாக்குகிறது என்று நிபுணர்கள் கூறினர். பெங்களூருவில் நாளை (வியாழக்கிழமை) முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. அதாவது பெங்களூருவில் 10, 11, 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு 2 வாரங்கள் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
இதேபோல், பெங்களூருவில் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான கல்லூரிகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கல்லூரிகளும் மூடப்படுகிறது. 1 முதல் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்படும். பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.
வார இறுதி நாள் ஊரடங்கு
அதே போல் வார இறுதி நாட்கள் (சனி-ஞாயிறு) ஊரடங்கு அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
மேலும் ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு வருகிற 7-ந் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகை குறித்து மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றுவோம். தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளோம். திருமணங்களில் உள் அரங்கில் 100 பேரும், திறந்தவெளியில் 200 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. வார இறுதி ஊரடங்கில் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
அனுமதி இல்லை
மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அத்தகையவர் களுக்கு மட்டுமே கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். கோவில்களில் 50 சதவீத பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பூஜைகள் எப்போதும் போல் மேற்கொள்ள அனுமதி உண்டு. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்படுகிறது. திருவிழாக்கள் நடத்த அனுமதி கிடையாது. பஸ்-மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கட்டுப்பாடு குறித்து தனியாக வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
என்னென்ன சேவைகளுக்கு அனுமதி
கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு வருகிற 7-ந்தேதி இரவு 10 மணி முதல் தொடங்குகிறது. இந்த ஊரடங்கு 10-ந்தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த வார இறுதி ஊரடங்கு நாட்களில் என்னென்ன சேவைகள் மக்களுக்கு கிடைக்கும் என்பது பற்றி அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
* அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களும், உள்ளாட்சி அமைப்பு, நகரசபை, மாநகராட்சிகள், அத்தியாவசிய சேவைகள், கோவிட் தடுப்பு பணிகள் வழக்கம் போல் செயல்படும்.
* அனைத்து பொது பூங்காக்களும் மூடப்படுகிறது.
* அனைத்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இரவு நேர ஊரடங்கின் போது அடையாள அட்டையை காண்பித்து பணிக்கு சென்று வரலாம்.
* அவசர சிகிச்சைக்காக நோயாளிகள், பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதற்குரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
* உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மீன், ஆடு, கோழி இறைச்சி கடைகள் மற்றும் பால் அங்காடிகள் வழக்கம் போல் இயங்கலாம்.
* அதுபோல் தெருவோர, சாலையோர கடைகள் செயல்படலாம்.
* அனைத்து வகையிலான பொருட்களுக்கான டெலிவிரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
* ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. ஆனால் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
* வழக்கம் போல் அரசு, தனியார் பஸ்கள், வாடகை கார்கள், இயங்க அனுமதி அளிக்கிறது. அதுபேல் விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் வாகன போக்குவரத்தை அனுமதிப்பதில் தடை கிடையாது. அது வழக்கம் போல் இயங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story