பெரம்பலூர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா


பெரம்பலூர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jan 2022 1:09 AM IST (Updated: 5 Jan 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (புதன்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த இந்த கூட்டம் ஒமைக்ரான் பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.
கூட்டத்தொடரையொட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபாகரன். தி.மு.க.வை சேர்ந்த இவர் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்று வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கார் டிரைவர் ஜான் மற்றும் உதவியாளர்கள் மணிகண்டன், இளையராஜா, சிவசங்கர் உள்பட 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகம் பூட்டப்பட்டது
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் முகாம் அலுவலகம், தொகுதி அலுவலகம் ஆகிய இடங்கள் சுகாதார துறையினரால் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பெரம்பலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டப்பட்டது. எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் உள்பட சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ. பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் நெருக்கமாக இருந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Next Story