போலீஸ்காரர்கள்போல் நடித்து மூதாட்டியிடம் 14 பவுன் நகை அபேஸ்


போலீஸ்காரர்கள்போல் நடித்து மூதாட்டியிடம் 14 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 4 Jan 2022 8:00 PM GMT (Updated: 2022-01-05T01:30:14+05:30)

பாளையங்கோட்டையில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ்காரர்கள்போல் நடித்து 14 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ்காரர்கள்போல் நடித்து 14 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதபெருமாள். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 63). மூதாட்டியான இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் அவர் கடைக்கு செல்வதற்காக ஜெபா கார்டன் பகுதியில் ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். வேலம்மாள் அருகே வந்ததும் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். பின்னர் அவர்கள், வேலம்மாளிடம் தாங்கள் 2 பேரும் போலீஸ்காரர்கள் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.

14 பவுன் நகை அபேஸ்

பிறகு வேலம்மாளை பார்த்து, இப்படி நகைகளைப் போட்டுக்கொண்டு வெளியே நடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறுவதுபோல் பேசினர். இதைத்தொடர்ந்து அவரிடம், நகைகளை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள், வீட்டிற்கு சென்ற பிறகு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

இதை நம்பிய வேலம்மாள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல், மோதிரம் என 14 பவுன் நகைகளை கழற்றி ஒரு தாளில் சுற்றி அதனை தனது பையில் வைக்க முயன்றார். அப்போது மர்ம நபர்கள் 2 பேரும் வேலம்மாளுக்கு உதவி செய்வதுபோல் நைசாக அந்த நகையை அபேஸ் செய்து விட்டு, கல் பொதிந்த தாளை மூதாட்டியின் பையில் போட்டு கொடுத்தனர். சிறிது தூரம் சென்றதும் வேலம்மாள் தன் பையிலிருந்த தாளை பிரித்து பார்த்தார். அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் அங்கு நின்றபடியே, `திருடன் திருடன்' என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து வேலம்மாள் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வலைவீச்சு

மேலும், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் மதுரை போலீசாரிடம் சிக்கி உள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டையில் போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story