ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை


ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jan 2022 1:35 AM IST (Updated: 5 Jan 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை விடுவிக்கக்கோரி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு;
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை விடுவிக்கக்கோரி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 
 தாக்குதல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக உள்ளார். இவரது மகன் முருகானந்தம் மற்றும் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(வயது 36)  என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றம் செய்யப்பட்டு முருகானந்தம், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
விசாரணைக்காக அழைத்து சென்றனர்
இந்த நிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற முருகானந்தத்தின் தந்தை பழனிவேலை தனிப்படை போலீசார் பிடித்து அழைத்து சென்றனர். அவரை வெளியூருக்கு கொண்டு சென்று முருகானந்தம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தனபால், ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரும், பழனிவேலின் உறவினர்களும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
அங்கு வந்த அவர்கள், விசாரணைக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழனிவேலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் புதூர் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது போலீசார், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பழனிவேலை விரைவில் விடுவிப்பதாக கூறினர். இதனால் அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் பழனிவேலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story