குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்


குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 5 Jan 2022 2:36 AM IST (Updated: 5 Jan 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா, ஒமைக்ரான் பரவலுக்கு இடையே குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.

நாகர்கோவில்:
கொரோனா, ஒமைக்ரான் பரவலுக்கு இடையே குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.
கொரோனா- ஒமைக்ரான்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகிவரும் மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்று. நேற்று முன்தினம் ஒரே நாளில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் மட்டும் 15 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்களோடு சேர்த்து குமரி மாவட்டத்தில் 60 ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஒமைக்ரான் பாதிப்பும் குமரி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 2 பேருடன், அறிகுறிகள் உள்ள 11பேர் சிகிச்சை பெற்று வந்தனர். எனவே மொத்த எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 10 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
டெங்கு பீதி
இவ்வாறு கொரோனாவும், ஒமைக்ரானும் மாறி, மாறி குமரி மாவட்ட மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில் டெங்கு காய்ச்சலும் சேர்ந்து பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு குமரி மாவட்டத்தில் குறைந்தது 3 பேர் முதல் அதிகபட்சமாக 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் தேங்கிய நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி ஆங்காங்கே உள்ள மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. ஏற்கனவே கொரோனா, ஒமைக்ரான் பரவல் அச்சத்தில் இருந்து வரும் குமரி மாவட்ட மக்களை, தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story