10½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி


10½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி
x
தினத்தந்தி 5 Jan 2022 2:49 AM IST (Updated: 5 Jan 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

10½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் 10½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த திட்டத்தை நேற்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கன்னங்குறிச்சி ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீண்ட வரிசையில் நின்று...
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ரேஷன்கார்டுகளில் உள்ள நபர் ஒருவர் வந்து இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று சென்றனர். மேலும் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதி உள்பட மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.
பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழுக்கரும்பு, துணிப்பை என 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டு தினமும் 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ரேஷன் கடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முககவசம்
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் ரூ.57 கோடி மதிப்பில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 29 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வருகிற 7-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு அன்றும் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகிறது. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் முககவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story