கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது - மந்திரி சுதாகர் பரபரப்பு தகவல்
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கொரோனா பாதிப்பு அதிகரித்தது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 100 அளவில் இருந்த பாதிப்பு கடந்த 2 நாட்களாக ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் 3-வது அலை தொடங்கிவிட்டதாக மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் 90 சதவீதம் பெங்களூருவில் பதிவாகிறது. இந்தியாவில் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இதே நிலை தான் உள்ளது. விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இன்று (நேற்று) நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறோம். இதில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 6.38 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஒரே நாளில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 252 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதிக தடுப்பூசிகளை செலுத்தியதில் கர்நாடகம் 4-வது இடத்தை பிடித்தது. 15 நாட்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிட்டு உள்ளோம். மத்திய அரசின் உத்தரவுப்படி முதல் டோஸ் தடுப்பூசி போடுகிறோம். 2-வது டோஸ் பற்றி எந்த தகவலும் வரவில்லை.
பொருளாதார நடவடிக்கைகள்
ஒமைக்ரான் வைரஸ் எவ்வாறு வேகமாக பரவுகிறது என்பதை உலக நாடுகளில் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. டெல்லி, மும்பை நகரங்களிலும் அந்த வைரஸ் அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரசை தடுக்க முடியாது. ஆனால் அதை தீவிரமாக பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஏற்கனவே தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. அதுபோல் தற்போதும் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. தற்போது அதிகரித்துள்ள பரவல், 3-வது அலையின் தொடக்கம் ஆகும். அதே போல் கர்நாடகத்திலும் பள்ளிகளை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு என்ற கடுமையான வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் தற்போது தான் சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
காங்கிரசார் கைவிட வேண்டும்
இது ஒரு சவாலான விஷயம். இந்த சவாலை ஏற்கனவே கிடைத்த அனுபவத்தை கொண்டு சரியான முறையில் எதிர்கொள்வோம். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூரு கொரோனா பரவலின் மையமாக திகழ்கிறது. மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த பாதயாத்திரை நடத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வைரஸ் பரவினால் அதற்கு காங்கிரஸ் தலைவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அதனால் பாதயாத்திரையை காங்கிரசார் கைவிட வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story