பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 2,053 பேருக்கு தொற்று உறுதி


பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 2,053 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 Jan 2022 3:18 AM IST (Updated: 5 Jan 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 2,479 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் பெங்களூருவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,053 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:
  
ஒமைக்ரான் வைரஸ்

  நாட்டில் கொரோனா 3-வது அலை சில மாநிலங்களில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, மராட்டியம், கேரளா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. அத்துடன் உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. இதனால் மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில் கர்நாடகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் 90 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இங்கு 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டினரும் அதிகளவில் வருகை தருகிறார்கள். அதனால் கர்நாடகத்தை பொறுத்தவரையில் பெங்களூருவில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

100 சதவீதம் அதிகரிப்பு

  கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 1,290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,033 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஒரே நாளில் பாதிப்பு சுமார் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.

  அதாவது நேற்று மாநிலத்தில் புதிதாக 2,479 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 2,053 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் பாதிப்பில் சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

  கொரோனா பரவலின் இந்த திடீர் அதிகரிப்பு, கர்நாடக அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் என்றும், எனவே கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கும்படி மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குணமடைந்தோர் எண்ணிக்கை

  கர்நாடகத்தில் நேற்று 95 ஆயிரத்து 391 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2,479 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 30 லட்சத்து 13 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

  இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது. 288 பேர் குணம் அடைந்தனர். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 61 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு விகிதம் அதிகரிப்பு

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.60-ல் இருந்து 2.59 ஆக அதிகரித்துள்ளது.

  புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெலகாவியில் 45 பேர், பெங்களூரு புறநகரில் 15 பேர், பெங்களூரு நகரில் 2,053 பேர், தட்சிண கன்னடாவில் 75 பேர், தார்வாரில் 29 பேர், ஹாசனில் 18 பேர், கலபுரகியில் 16 பேர், கோலாரில் 14 பேர், மண்டியாவில் 17 பேர், மைசூருவில் 48 பேர், துமகூருவில் 11 பேர், உடுப்பியில் 72 பேர் உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெங்களூரு நகரில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் பீதி

  கர்நாடகத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின் போதும் பெங்களூருவில் தான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதுபோல் கொரோனா 3-வது அலை தொடங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் மக்களும் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

Next Story