‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அச்சுறுத்தலான பள்ளம் உடனடி மூடல்
சென்னை மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் சாய்பாபா கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் பள்ளம் இருக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையில் ஏற்பட்ட அந்த பள்ளத்தை மூடியுள்ளனர். விரைவான நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தெருவிளக்குகளுக்கு மீண்டும் புத்துயிர்
சென்னை கொளத்தூர் கென்னடி சதுக்கம் குறுக்குதெருவில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால், இப்போது மேற்கண்ட தெருவில் எரியாமல் இருந்த தெருவிளக்குகள் மீண்டும் எரியத்தொடங்கி உள்ளன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் நன்றி
சென்னை மந்தைவெளி பஸ் நிலையம் அருகே சாலையில் ஆபத்தான வகையில் பள்ளம் இருந்தது, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பாதாள சாக்கடை மூடி சேதம்
சென்னை சேப்பாக்கம் பங்காரு தெரு முனை சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்தை தினமும் அனுபவித்து வருகிறார்கள். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்களும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- பொதுமக்கள்.
நாய்கள் தொல்லையால் அவதி
சென்னை தண்டையார்ப்பேட்டை நேதாஜிநகர் 3-வது தெரு, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம் ராமதாஸ் நகர் சரஸ்வதி தெரு, கிழக்கு தாம்பரம் திருவாஞ்சேரி கிராமம் செல்வராஜ் தெரு ஆகிய பகுதிகளில் நாய்கள் தொல்லை மிகுதியாக இருக்கிறது. சாலையில் செல்வோரை விரட்டி கடிக்க பாய்கிறது. இதனால் தெருக்களில் நடமாடவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மக்கள் நலன்காக்கும் வகையில் நாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.
எப்போது கீழே விழுமோ?
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் 41-வது பிளாக் அருகில் உள்ள மின் இணைப்பு பெட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது கீழே விழுமோ? என்ற அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாகரன், வியாசர்பாடி.
குரங்குகள் அட்டகாசம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் சீதாபுரம் கிராமத்தில் குரங்களின் அட்டகாசம் மிகுதியாகவே இருக்கிறது. வீடுகளின் உள்ளே வருவதும், குழந்தைகளின் கையில் உள்ள திண்பண்டங்களை பிடுங்கியும் சென்றுவிடுகின்றன. வீடுகளில் உள்ள முதியோரையும் படாதபாடு படுத்திவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கும், சிரமங்களுக்கும் ஆளாகி வருகிறார்கள். குரங்களின் தொல்லைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ரமேஷ், சீதாபுரம்.
பாதசாரிகளை அச்சுறுத்தும் கேபிள் வயர்
சென்னை மந்தவெளியில் புனிதமேரி சாலையில் கேபிள் வயர்கள் சாலையின் ஓரத்தில் வெளிப்புறமாக இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்கள் கால்களில் வயர்கள் சிக்கி தடுமாறும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள்.
மாடுகள் உலா; வாகன ஓட்டிகள் சிரமம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை நடுவே ஏராளமான மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருப்பதால் ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?.
-வாகன ஓட்டிகள்.
ஆறாக ஓடும் கழிவுநீர்
சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் மீனாட்சி பள்ளி தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கழிவுநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகிறோம். எங்களுடைய கஷ்டத்தை உணர்ந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
-விமல், அம்பத்தூர்.
Related Tags :
Next Story