நீலகிரியில் 5 லட்சத்து 87 ஆயிரம் வாக்காளர்கள்
நீலகிரியில் 5 லட்சத்து 87 ஆயிரம் வாக்காளர்கள்
ஊட்டி
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நீலகிரியில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகம்.
இறுதி வாக்காளர் பட்டியல்
நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி யில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் நகல் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:- ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 98,135 ஆண் வாக்காளர்கள், 1,07,283 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2,05,424 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 92,955 ஆண் வாக்காளர்கள், 97,914 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,90,871 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
பெண்கள் அதிகம்
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 91,065 ஆண் வாக்காளர்கள், 1,00,323 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 1,91,391 வாக்காளர்கள் உள்ளனர். நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளில் 2,82,155 ஆண் வாக்காளர்கள், 3,05,520 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் 23,365 பேர் அதிகமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர். கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு மாதம் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்தது. இதில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை மூலம் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 2,147 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 8,026 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
686 வாக்குச்சாவடிகள்
கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் போது, கூடுதலாக 5,879 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் அதிகம் பேர் இடம்பெற்றனர்.
ஊட்டி தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 225 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 222 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 686 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story