7610 ரேஷன் அட்டைதாரர்கள் நீக்கம்
7610 ரேஷன் அட்டைதாரர்கள் நீக்கம்
ஊட்டி
நீலகிரியில் 35 கிலோ இலவச அரிசி திட்டத்தின் கீழ் 7,610 ரேஷன் அட்டைதாரர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகள்
நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 497 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 298 முழுநேர கடைகள், 105 பகுதிநேர கடைகள், 33 நடமாடும் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் தொகுப்பு வாங்க வருகிறவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படுகிறது. இந்த படிவங்களில் தங்களது குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், முதல் டோஸ், 2-வது டோஸ் செலுத்தி உள்ளார்களா, வயது போன்ற விவரங்களை பதிவு செய்து மீண்டும் அந்தந்த ரேஷன் கடையில் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர்.
சான்றிதழ் கட்டாயமில்லை
அவ்வாறு வழங்கும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற விவரங்களை சரிபார்த்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை. தடுப்பூசி செலுத்திய விவரங்களை பெற்றுக்கொண்டு, தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடியாக செலுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னுரிமையில் இருந்து நீக்கம்
இதன் மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த முடியும். நீலகிரியில் 6 தாலுகாக்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 6 கிடங்குகள் உள்ளன. அதன் மொத்த கொள்ளளவு 11,310 மெட்ரிக் டன் ஆகும். அந்தியோதயா அன்ன யோஜனா (35 கிலோ இலவசஅரிசி திட்டம்) ரேஷன் அட்டைகளை தணிக்கை செய்ததில், மொத்தம் உள்ள 16,624 அட்டைகளில் 7,610 அட்டைதாரர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களை திட்டத்தில் இருந்து நீக்கம் செய்து முன்னுரிமை இல்லாத ரேஷன் அட்டை வகைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் பெறாத ரேஷன் அட்டைகளை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story