வேட்புமனு தாக்கல் வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான வழக்கு
வேட்புமனு தாக்கல் வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான வழக்கில் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு அவகாசம் வழங்கி உள்ளது.
மதுரை,
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்கு, தண்டனை விவரங்களை வேட்புமனுவுடன் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், பழைய நடைமுறையை பின்பற்றி தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிக்க பிரமாண பத்திர நடைமுறைகளில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும். நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிராமண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் பெற்று, அதனை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தேர்தல் கமிஷனிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும் படி அரசு வக்கீலுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல் முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றனவா?" என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story