தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 12¾ லட்சம் வாக்காளர்கள் இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு 1.1.2022-ந் தேதியை தகுதி நாளாக நிர்ணயித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் விடுபட்டவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் உரிய தணிக்கை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
திருத்தங்கள்
வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் ஆகியோரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் வாக்காளர் பட்டியலில் பதிவுகளில் திருத்தம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்ற தொகுதிகளில் 6,43,253 ஆண் வாக்காளர்களும், 6,31,962 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலின வாக்காளர்கள் 176 பேரும் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,75,391 ஆகும். மாவட்டத்தில் 1000 ஆண் வாக்காளர்களுக்கு 982 பெண் வாக்காளர்கள் என்ற விகிதம் உள்ளது.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
1.11.2021 முதல் 30.11.2021 வரை நடந்த சிறப்பு சுருக்க திருத்தம் மூலம் 18,773 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். படிவம் எண்-7 மூலமாக 5,733 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றை வாக்காளர் தொடர் சுருக்க திருத்த காலத்தில் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்- 2022 தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story