கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது டிரைவர் கண்டக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்று டிரைவர் கண்டக்டர்களுக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தினார்.
திடீர் ஆய்வு
கொரோனா 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தர்மபுரி 4 ரோடு, புறநகர் பஸ் நிலையம், அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி 4 ரோட்டில் முக கவசம் அணியாமல் வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.
எச்சரிக்கை
இதேபோன்று பொது இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள், சாலையில் செல்வோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் பஸ்சில் சென்ற பயணிகளிடம் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். கல்லூரி மாணவ-மாணவிகளிடம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிய வேண்டும். பொதுமக்களை முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story