வங்கியில் தீக்குளிக்க முயன்ற பால் பண்ணை உரிமையாளர்; வருசநாட்டில் பரபரப்பு


வங்கியில் தீக்குளிக்க முயன்ற பால் பண்ணை உரிமையாளர்; வருசநாட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 10:13 PM IST (Updated: 5 Jan 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

வருசநாட்டில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கியில் பால் பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் சொந்தமாக பால்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம், மயிலாடும்பாறை பகுதியில் செயல்படும் தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் வீட்டுக்கடன் பெற்றிருந்தார். அந்த கடனுக்கான தவணை தொகையை கடந்த சில மாதங்களாக அவர் செலுத்தவில்லை. இதனால் வங்கி நிர்வாகத்தினர் செல்வத்துக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விட முடிவு செய்தனர். அதற்கான நோட்டீசையும் செல்வத்துக்கு அனுப்பி வைத்தனர். 
இந்தநிலையில் வங்கியில் நேற்று ஏலம் நடைபெற்றது. அப்போது வங்கிக்கு வந்த செல்வம், கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். மேலும் தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகள் அவரை தடுத்து நிறுத்தினர். 
பின்னர் அவரிடம் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து செல்வம் தனது தீக்குளிப்பு முயற்சியை கைவிட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தேதி குறிப்பிடாமல் ஏலத்தை வங்கி நிர்வாகத்தினர் ஒத்திவைத்தனர். இந்த சம்பவம் வருசநாட்டில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story