ரவுடி பட்டியலில் மாணவர்கள் பெயரை சேர்த்ததை கண்டித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ரவுடி பட்டியலில் மாணவர்கள் பெயரை சேர்த்ததை கண்டித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை  பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 10:17 PM IST (Updated: 5 Jan 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

ரவுடி பட்டியலில் மாணவர்கள் பெயரை சேர்த்ததை கண்டித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

தேர்தல் முன்விரோதம் 

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. 
இதனிடையே அந்த கிராமத்திற்குட்பட பழைய காலனியை சேர்ந்த ஒரு தரப்பினர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கல்லூரி மாணவர்களின் பெயரை ரவுடி பட்டியலில் சேர்த்து, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதாக பழைய காலனியை சேர்ந்தவர்கள் புகார் கூறி வந்தனர். 

ரவுடிகள் பட்டியலில் மாணவர்கள்... 

இந்தநிலையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வீரப்பன் என்பவரை நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி சுந்தரமூர்த்தி என்பவரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கிருந்த சுந்தரமூர்த்தியிடம், ரவுடிகள் கண்காணிப்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறும் கூறினர். இதற்கு சுந்தரமூர்த்தி மறுப்பு தெரிவித்ததோடு, போலீஸ் நிலையத்திற்கு வரமாட்டேன் என்று கூறினார். 

போலீஸ் நிலையம் முற்றுகை 

இது பற்றி அறிந்ததும், அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு, போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். 
இதனால் ஆத்திரமடைந்த பழைய காலனியை சேர்ந்த பொதுமக்கள், மண்எண்ணெய் கேன்களுடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், கல்லூரி மாணவர்களையும், படித்த இளைஞர்களையும் ரவுடிகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்ததை கண்டித்தும், விசாரணை என்ற பெயரில் அவர்களை அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதை கண்டித்தும் கோஷமிட்டனர். 

பெண்கள் தீக்குளிக்க முயற்சி 

அப்போது, படித்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற வேண்டும், ரவுடிகள் கண்காணிப்பு பட்டியலில்  இருந்து அவர்களது பெயரை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி பெண்கள், தங்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். 
இதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார், அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேன்களை பிடுங்கினர். பின்னர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது போலீசார், உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். 

பரபரப்பு 

இதனை ஏற்ற பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறாவிட்டாலும், ரவுடிகள் கண்காணிப்பு பட்டியலில்  இருந்து அவர்களது பெயரை நீக்காவிட்டாலும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story