காரைக்கால் வேளாண் கல்லூரியில் 23 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
காரைக்கால் வேளாண் கல்லூரியில் 23 மாணவ-மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டுச்சேரி, ஜன.
காரைக்கால் வேளாண் கல்லூரியில் 23 மாணவ-மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி விடுதியில் புத்தாண்டு கொண்டாடியதால் தொற்று பரவியது.
புத்தாண்டு கொண்டாட்டம்
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் சுரக்குடியில் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் தனித்தனியாக கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விடுதி பெண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
23 பேருக்கு கொரோனா
இந்தநிலையில் கல்லூரி விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 13 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மேற்பார்வையில், மருத்துவக்குழுவினர் வேளாண் அறிவியல் கல்லூரிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில் கல்லூரி ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள 23 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவி இருப்பது மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வேளாண் கல்லூரியை தற்காலிகமாக மூடுவது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story