மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு


மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 10:21 PM IST (Updated: 5 Jan 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

காத்திருப்பு போராட்டம்

மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.4 ஆயிரத்து 625 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள்  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இணை செயலாளர்கள் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் செல்லையா, ராமச்சந்திரன், கற்பனைச்செல்வம், மகாலிங்கம், ரமேஷ்பாபு, ஜெயக்குமார், ஜோதி, ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இது பற்றி தகவல் அறிந்ததும் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் அங்கு வந்து, போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி    கணேசன் வந்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மாலை 6 மணியை கடந்தும் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story