தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்க வியாபாரிகளிடம் சக்தி இல்லை நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்க வியாபாரிகளிடம் சக்தி இல்லை நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி
நாமக்கல்:
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்க வியாபாரிகளிடம் சக்தி இல்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
ஐம்பெரும் விழா
தமிழக ஹையர் கூட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்பன உள்பட ஐம்பெரும் விழா நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒலி-ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், ஸ்டேஜ் டெக்கரேட்டர், மணவறை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை ஒமைக்ரான் என்ற அடிப்படையில் மீண்டும் உருவாகி வருகிறது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அந்த கட்டுப்பாடுகள் வணிக நிறுவனங்களையும், கோவில்களையும் மூடாதவாறு, நேர காலத்தை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.
சக்தி இல்லை
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 44 சதவீத வணிகர்கள் மீண்டு வர முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், அதை சந்திக்க வியாபாரிகளுக்கு சக்தி இல்லை. கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்கிற தமிழக முதல்-அமைச்சரின் எண்ணத்திற்கு நாங்கள் துணை நிற்போம். ஆனால் கட்டுப்பாடுகளை முறைபடுத்தி அறிவிக்க வேண்டும்.
இதேபோல் வியாபாரிகளும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மிக, மிக அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து முழு ஊரடங்கு தொடர்பான முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு
மத்திய அரசு ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. 12 வரியை சதவீதமாக உயர்த்தியதை நிறுத்தி வைத்து உள்ளது. இதை உயர்த்த கூடாது என்றும், செருப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் மத்திய நிதி மந்திரியை நாங்கள் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். ஒரு எண்ணெய் உடன் மற்றொரு எண்ணெயை கலப்படம் செய்ய அரசு அனுமதிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நோயின்றி வாழ முடியும்.
பிஸ்கட், சோப்பு போன்றவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். வணிகர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து விலை நிர்ணயம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் என்ன என்பதை அரசு முன்மொழிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story