நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:29 PM IST (Updated: 5 Jan 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் தொற்று பரவ வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது யாரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் நோய்த்தொற்று வெகு விரைவில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், 30 படுக்கை வசதி கொண்ட 5 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 200 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் விவேகானந்தா மருத்துவமனையில் தயார் செய்யப்பட்டு உள்ளது.
சென்ற வாரம் கொரோனா நோய்த்தொற்று முற்றிய நிலையில் வந்த முதியோர்களின் இறப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் நம்மிடமிருந்து அகலவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உயிரிழப்பு இல்லை
கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்போ, கடுமையான பாதிப்போ ஏற்படுத்துவதில்லை. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரானா நோய் தொற்றின் வீரியம் குறைவாக காணப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14,64,300 நபர்களில் 11,57,687 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,98,794 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பல முறை எச்சரித்தும் பொதுமக்கள் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.
எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கொரோனா 3-வது அலை பாதிக்காமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story