ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி
திண்டுக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் மக்கள் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்:
ஏலச்சீட்டு மோசடி
திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஒரு பெண் ஏலச்சீட்டு நடத்தி தங்களை மோசடி செய்ததாக கூறி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என 3 வகையான சீட்டுகளை நடத்தினார்.
ஒவ்வொரு சீட்டுக்கும் 20 மாதங்கள் பணம் செலுத்த வேண்டும். இதில் முருகபவனம் உள்பட திண்டுக்கல்லை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அவரிடம் சீட்டு சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம்.
ரூ.2 கோடி
அந்த வகையில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு சீட்டு பணமாக பலர் செலுத்தி உள்ளனர். இதில் சிலருக்கு 20 மாதங்கள் முடிந்த பின்னரும் சீட்டு பணத்தை திரும்ப தரவில்லை.
அதுபற்றி அவரிடம் கேட்ட போது காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அவர் வெளியூருக்கு சென்றார். அதன்பின்னர் அவரை சந்திக்க முடியவில்லை. மேலும் அவருடைய செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு விட்டது. இதனால் அவரிடம் சீட்டு பணம் குறித்து பேசக்கூட முடியவில்லை. எனவே அவரிடம் இருந்து எங்களுடைய பணத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறினர்.
Related Tags :
Next Story