ரூ.5¼ லட்சம் மோசடி செய்த பெண் சாமியார் கைது
ஆசிரமத்தை விரிவுப்படுத்த நிலம் வாங்கி தருவதாக கூறி, ரூ.5¼ லட்சம் மோசடி செய்த பெண் சாமியார், தனது தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
சாமியார் ஞான தேவபாரதி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பை கிராமத்தை சேர்ந்தவர் தவயோகி ஞான தேவபாரதி (வயது 58). சாமியாரான இவர், கடந்த 40 ஆண்டுகளாக ஆன்மிக பணி செய்து வருகிறார்.
இவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வீலிநாயக்கன்பட்டி மலையடிவாரத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். அதன் நிர்வாகியான சண்முகசுந்தரம் மனைவி அருள்மணி, கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் நாகல்நகர் மேற்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த பபிதா என்ற பவித்ரா (41) என்பவர், தன்னை காளியின் பக்தை என்று தேவயோகியிடம் அறிமுகப்படுத்தி ஆசிரமத்துக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.
3 மாதங்கள் தங்கி பூஜை
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில், 3 மாதங்கள் ஆசிரமத்தின் அருகே சாமியாருக்கு சொந்தமான நந்தவனத்தில் தங்கி பூஜைகளில் பபிதா கலந்து கொண்டார். இதன் மூலம் தவயோகியிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே ஆசிரமத்தை விரிவுப்படுத்த நிலங்கள் வாங்கலாம் என்றும், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை தெரியும் என்று சொல்லி சாமியாரிடம் ஆசைவார்த்தை கூறினார்.
ரூ.5¼ லட்சம் மோசடி
பபிதாவுடன் அவருடைய தங்கை ரூபாவதி என்ற லூமாவும் அடிக்கடி நந்தவனத்தில் தங்கி தேவயோகியுடன் பழகினர். மேலும் நிலத்துக்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, பல தவணைகளில் சுமார் ரூ.5¼ லட்சம் வரை பபிதா, ரூபாவதி, அவருடைய மகன் ஆகியோரின் வங்கி கணக்குகளில் தேவயோகி செலுத்தினார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு நிலம் வாங்கி தராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர். மேலும் அவர்கள் ஆசிரமத்துக்கு வந்து சென்ற காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி சொத்து ஆவணங்கள், நகைகளை ஏமாற்றி எடுத்து சென்று விட்டனர்.
எனவே நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அருள்மணி கூறியிருந்தார்.
கொலை செய்ய முயற்சி
இதேபோல் சாமியார் தேவயோகி ஞானதேவபாரதி, கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பபிதா மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில், பபிதாவுக்கு கொடுத்த பவர் பத்திரத்தை ரத்து செய்ததன் பேரில் சொத்தை சட்டப்பூர்வமாக அவரால் அடைய முடியவில்லை. இதனால் என் ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்தும், பொருட்களை சேதப்படுத்தியும் என்னுடைய சொத்துக்களை அபகரிக்க சதி திட்டம் தீட்டி வருகிறார்.
மேலும் அவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்புதுப்பட்டியை சேர்ந்த அகம்ஷா என்பவரை அனுப்பி வைத்தார். அவர் என்னை கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றார். எனவே பபிதா மற்றும் அகம்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தங்கையுடன் கைது
இந்த 2 புகார்கள் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பபிதா, அவருடைய தங்கை மற்றும் சிலரை தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த பபிதா திண்டுக்கல் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல் வந்தனர்.
பின்னர் திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்த பபிதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவருடைய தங்கை ரூபாவதியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்களை, நிலக்கோட்டைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
பெண் சாமியார்
கைதான பபிதா, சாமியார் போல வலம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தன்னை காளியின் அவதாரம் என்றும், தனக்கு காளியின் பரிபூரண அருள் இருப்பதாகவும் கூறி பக்தர்களுக்கு பபிதா ஆசி வழங்கி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திண்டுக்கல்லில் கூட்டம் நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது முக்கிய பிரமுகர்கள் சிலர் இவரிடம் ஆசி பெற்று சென்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மோசடி வழக்கில் பெண் சாமியார், தனது தங்கையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story