செஞ்சியில் பரபரப்பு: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் மண்டப மேற்கூரையை பெயர்த்து எடுத்து கொள்ளை முயற்சி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் தப்பியது
செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மண்டபத்தின் மேற்கூரை கம்பிகளை பெயர்த்து எடுத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். கோவில் காவலர்கள் உஷாரானதால் பலகோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் தப்பியது.
செஞ்சி,
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் மலைமீது பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறைக்கு 5 கதவுகளை தாண்டி உள்ளே செல்ல வேண்டும். கோவிலினுள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளை திருட ஏற்கனவே கொள்ளையர்கள் பல முறை முயற்சி செய்துள்ளனர். இதனால் கோவிலில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவிலுக்குள் சத்தம் கேட்டது.
இதையடுத்து கோவில் இரவு காவலர்கள் ரமேஷ் மற்றும் தேவா ஆகியோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கிருந்து மர்ம மனிதர்கள் சிலர் மேற்கூரையின் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
கம்பிகளை பெயர்த்து எடுத்தனர்
இதுபற்றி அறிந்த கோவில் மணியம் இளங்கீர்த்தி இந்து சமய அறநிலையத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவில் உதவி ஆணையர் ராமு நேரில் பார்வையிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்கம், சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன், முருகானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது, இரண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், உள் மண்டபத்தின் மேற்கூரையில் போடப்பட்டு இருந்த கம்பிகளை பெயர்த்து எடுத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்துள்ளனர். அதற்கு முன் அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட சத்தத்தில் கோவில் காவலாளிகள் உள்ளே வந்ததால், மர்ம மனிதர்கள் வந்த வழியாகவே தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இதற்கிடையே நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கொள்ளை முயற்சி நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து கோவில் மணியம் இளங்கீர்த்தி செஞ்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலினுள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் உள்ளதால் தொடர்ந்து கொள்ளையர்கள் மூன்றாவது முறையாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதுகாப்பை அதிரிக்க வேண்டும்
இதற்கிடையே தொடர்ந்து 3-வது முறையாக கொள்ளை முயற்சி நடந்து இருப்பதால், கோவிலுக்கு கூடுதலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story