கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு சர்க்கரை என நினைத்து கால்நடை மருந்து சாப்பிட்ட 8 சிறுவர் சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம்


கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு சர்க்கரை என நினைத்து கால்நடை மருந்து சாப்பிட்ட 8 சிறுவர் சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2022 11:05 PM IST (Updated: 5 Jan 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே சர்க்கரை என நினைத்து கால்நடை மருந்து சாப்பிட்ட 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கச்சிராயப்பாளையம்

சிறுவர், சிறுமிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியாப்பிள்ளை மகன் சிவமணி(வயது 3), மகள் இளமதி (5), கலியமூர்த்திமகன் ராசுகுட்டி(6), முருகேசன் மகள் காயத்ரி(6), சீனிவாசன் மகன் நரிஷ்(7), மகள் நவஸ்ரீ(9), தாகப்பிள்ளை மகன் துளசிபாலன்(6), தனபால் மகள் கயல்(8) ஆகிய 8 பேரும் அங்குள்ள காமராஜர் நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு சாலையோரத்தில் சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருள் கீழே கொட்டி கிடந்ததை பார்த்த அவர்கள் அவற்றை போட்டி போட்டு அள்ளி தின்றனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுவர், சிறுமியர் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 8 சிறுவர், சிறுமிகளையும் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விசாரணையில் சாலையோரம் கொட்டிக் கிடந்த பொருள் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கான தடுப்பு மருந்து பொட்டாசியம் மேக்னைட் என்பதும், அது பார்ப்பதற்கு சர்க்கரை போன்று இருந்ததால் சர்க்கரை என நினைத்து சிறுவர், சிறுமியர்கள் அள்ளி தின்றதும் தெரியவந்தது. 

அதிகாரிகள் விசாரணை

ஆனால் அந்த பகுதி சாலையோரத்தில் கால்நடை மருந்து கொட்டி கிடந்ததற்கான காரணம் தெரியவில்லை? இது குறித்து காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  கச்சிராயப்பாளையம் அருகே சர்க்கரை என நினைத்து கால்நடை மருந்தை சாப்பிட்ட 8 சிறுவர் சிறுமியர்கள் வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story