மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் கோதண்டம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கோரிக்கைகள்
கனமழையால் முற்றிலும் அழிந்துபோன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மழை நிவாரணத்துக்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே வழங்க வேண்டும்,
முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு உடனடியாக தொகுப்பு வீடு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகன், சுந்தரமூர்த்தி, தாண்டவராயன், வேல்மாறன், ராஜேந்திரன், சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 100 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story