சொத்து தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூதாட்டி மீது வழக்கு


சொத்து தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூதாட்டி மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jan 2022 6:25 PM GMT (Updated: 2022-01-05T23:55:08+05:30)

சொத்து தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூதாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை, 
சொத்து தகராறு
குளித்தலை அருகே உள்ள நடுஊத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மனைவி இந்திராணி (வயது 46). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கண்ணையன் கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து, தனது கணவருடைய சொத்துக்களை வாரிசு அடிப்படையில் இந்திராணி அனுபவித்து வந்துள்ளார். மேலும், கண்ணையனின் தம்பி ராஜு இவர்களுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கீழ ஐந்தாம் பட்டியலைச் சேர்ந்த லட்சுமி (60) என்பவர் கண்ணையன் தனது கணவர் என்று கூறிக்கொண்டு இந்திராணியிடம் சொத்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
கொலை மிரட்டல்
இதுகுறித்து குளித்தலை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இவ்வழக்கு கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சொத்துக்கள் அனைத்தும் இந்திராணிக்கு உரியது என்றும் லட்சுமி கண்ணையனின் மனைவி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து இந்திராணி நேற்று முன்தினம் தனது வீட்டில் மராமத்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி லட்சுமி, பணியாட்களை வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, இதுகுறித்து கேட்ட இந்திராணியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மூதாட்டி மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து இந்திராணி அளித்த புகாரின் பேரில் மூதாட்டி லட்சுமி மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story