திமிங்கல உமிழ்நீரை கடத்திய வழக்கில் சென்னை வியாபாரி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண்
திமிங்கல உமிழ்நீரை காரில் தென்காசிக்கு கடத்திய வழக்கில் தேடப்பட்ட சென்னை வியாபாரி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
வேலூர்
திமிங்கல உமிழ்நீரை காரில் தென்காசிக்கு கடத்திய வழக்கில் தேடப்பட்ட சென்னை வியாபாரி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திமிங்கல உமிழ்நீர் கடத்தல்
தென்காசி பழைய பஸ்நிலையம் அருகே கடந்த 3-ந் தேதி தென்காசி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ஆம்பர் கிரீஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 21 கிலோ எடையுடைய ரூ.3½ கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஜார்ஜ்மைக்கேல் ரோஸ் (வயது 46), நெல்லை தாழையூத்தை சேர்ந்த மோகன் (52) என்பது தெரிய வந்தது. மேலும் திமிங்கல உமிழ்நீரை சென்னையை சேர்ந்த வியாபாரி கமல்பாபு வைத்திருந்தார். அதனை யாரிடமாவது விற்றுக்கொடுத்தால் அதற்கு கமிஷன் தருவதாக அவர் தெரிவித்தார். அதனை தென்காசியை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்வதற்காக சென்னையில் இருந்து காரில் கமல்பாபு உள்பட 3 பேரும் திமிங்கல உமிழ்நீரை கொண்டு வந்ததாகவும், அவர் கடைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சென்னை வியாபாரி சரண்
இதையடுத்து ஜார்ஜ் மைக்கேல்ரோஸ், மோகன் ஆகியோரை போலீசார் பிடித்து கடையநல்லூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆம்பர்கிரீசுடன் காரும் ஒப்படைக்கப்பட்டது. ஜார்ஜ், மைக்கேல்ரோஸ், மோகன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் இதில், தொடர்புடைய கமல்பாபுவை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கமல்பாபு (39) நேற்று மாலை சரண் அடைந்தார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். அதில், அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்கார்பூரை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் வியாபாரம் செய்து வருவதும், திமிங்கல உமிழ்நீர் கடத்தல் வழக்கில் கடையநல்லூர் வனத்துறையினரால் தேடப்பட்டு வருவதும் தெரிய வந்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் இதுகுறித்து கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். கமல்பாபுவை அழைத்து செல்ல வனத்துறையினர் வேலூருக்கு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story