குமரியில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள்
குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 28 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 28 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல்
குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-11-2021 அன்று வெளியிடப்பட்டது. அப்போது 7 லட்சத்து 83 ஆயிரத்து 923 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 86 ஆயிரத்து 739 பெண் வாக்காளர்களும், 195 இதர வாக்காளர்கள் (மூன்றாம் பாலினத்தவர்)என மொத்தம் 15 லட்சத்து 70 ஆயிரத்து 857 வாக்காளர்கள் இருந்தனர்.
இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்தது. தகுதியான புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியல் சேர்க்கப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 2 ஆயிரத்து 508 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 302 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 812 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் ஆயிரத்து 743 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 386 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளரும் என மொத்தம் 4 ஆயிரத்து 130 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வாக்காளர்கள் நீக்கம்
இதே போல குளச்சல் சட்டசபை தொகுதியில் 2 ஆயிரத்து 319 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 357 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 676 பேரும், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 567 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 313 பேரும், விளவங்கோடு சட்டசபை தொகுதியில் ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 296 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 984 பேரும், கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் ஆயிரத்து 882 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 547 பேரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது 6 சட்டசபை தொகுதிகளிலும் 11 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 571 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 ஆயிரத்து 462 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பெயர் நீக்கம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து இறந்த மற்றும் இடம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்தனர். அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 ஆயிரத்து 399 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 360 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 764 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இறுதி பட்டியல்
இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். பின்னர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து 92 ஆயிரத்து 410 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 99 ஆயிரத்து 950 பெண் வாக்காளர்களும், 195 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், தேர்தல் தனி தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story