வேலைக்கு செல்லாத கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண்
கொல்லங்கோடு அருகே வேலைக்கு செல்லாத கணவனை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே வேலைக்கு செல்லாத கணவனை பயமுறுத்துவதற்காக தீக்குளித்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி மனைவி
கொல்லங்கோடு அருகே உள்ள நித்திரவிளை நம்பாளி பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி சிந்து (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதை சிந்து கண்டித்து வந்தார்.
தீக்குளிக்கப்போவதாக...
இந்தநிலையில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்தது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் சிந்து கண்டித்துள்ளார்.
அப்போது, ரவி வீட்டில் உணவு சாப்பிடாமல், கடையில் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனால், சிந்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி விட்டு கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குச்சியை உரசி கீழே போட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக தீ அவரது ஆடையில் பற்றியது. தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் வலிதாங்க முடியாமல் அலறினார்.
தீவிர சிகிச்சை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே, சிந்துவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரவி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story