இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: கரூரில் 9 லட்சம் வாக்காளர்கள்
கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 9 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும்,ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
கரூர்,
இறுதி வாக்காளர் பட்டியல்
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2022-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பள்ளப்பட்டி மற்றும் புகளூர் நகராட்சிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலையும் கலெக்டர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-
அரவக்குறிச்சி, கரூர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்காளர் சுருக்க முறைத்திருத்தங்களின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 810 ஆண்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 656 பெண்களும், இதரர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 473 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.கரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 791 ஆண்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 270 பெண்களும், இதரர் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 85 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், குளித்தலை
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 454 ஆண்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 992 பெண்களும், இதரர் 52 பேர் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 498 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 149 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 180 பெண்களும், இதரர் 9 பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 338 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
9 லட்சம் வாக்காளர்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 35 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ.க்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), தேர்தல் தாசில்தார் பிரபு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story