பெருஞ்சாணி அணையில் முழுவீச்சில் மின் உற்பத்தி
பாசனத்துக்கு சீராக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெருஞ்சாணி அணையில் முழுவீச்சில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
குலசேகரம்:
பாசனத்துக்கு சீராக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெருஞ்சாணி அணையில் முழுவீச்சில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
நீர்மின் திட்டம்
குமரி மாவட்டத்தில் கோதையாறில் 60 மற்றும் 40 மெகாவாட் திறன் கொண்ட 2 நீர் மின் திட்டங்களும், ஆரல்வாய்மொழியில் காற்றாலை மின் திட்டங்களும் பிரதான மின் திட்டங்களாக உள்ளன.
இந்த நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் மதகுப்பகுதியில் சிறு புனல் மின் திட்டங்கள் உருவாக்கும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டது. அப்போது 100 ஆண்டுகள் கடந்த பேச்சிப்பாறை அணையில் மின் திட்டம் உருவாக்கக்கூடாது என விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த அணையில் மின் திட்டம் அமைக்கும் அரசின் முடிவு கைவிடப்பட்டது.
பெருஞ்சாணி அணை
அதைத்தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் மின்திட்டம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில், அணையின் முன்பு 650 கிலோவாட் திறன் கொண்ட 2 அலகுகள் (யூனிட்) கொண்ட மின் திட்டம் அமைக்கும் பணி 2006-ம் ஆண்டு நிறைவடைந்தது. முதலில் ஒரு அலகு மட்டுமே இயங்கிவந்த நிலையில், மற்றொரு அலகு வடிவமைப்புக் கோளாறு காரணமாக இயங்காமல் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த அலகும் புனரமைக்கப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த நீர் மின்திட்டமானது, அணையின் பிரதான 2 மதகுகள் வழியாக பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மின் நிலைய அலகுகளில் உள்ள டர்பைன்கள் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே மின்நிலையத்தை இயக்க முடியும்.
முழு வீச்சில் மின் உற்பத்தி
இந்த மின்நிலையத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வீயன்னூர் 11 கே.வி. மின் தடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்நிலைய மேற்பார்வை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெருஞ்சாணி மின் நிலையத்தில் 650 கிலோவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது மழை நின்றதை தொடர்ந்து பாசனத்திற்கு சீராக தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், அணையில் திருப்திகரமான அளவில் நீர் இருப்பதாலும் மின் உற்பத்தி முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.
Related Tags :
Next Story