தஞ்சை மாவட்டத்தில் 20.70 லட்சம் வாக்காளர்கள்
தஞ்சை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 20 லட்சத்து 70 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 20 லட்சத்து 70 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்று கொண்டனர்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டதில் 10 லட்சத்து 4 ஆயிரத்து 103 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 60 ஆயிரத்து 560 பெண் வாக்காளர்களும், 157 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 820 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர்.
சிறப்பு முகாம்கள்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திட 28 ஆயிரத்து 765 நபர்களிடம் இருந்து படிவம்-6 பெறப்பட்டு அதில் 28 ஆயிரத்து 260 படிவங்கள் ஏற்கப்பட்டன. 505 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன.
இறந்த மற்றும் வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்திட 23 ஆயிரத்து 140 பேரிடம் இருந்து படிவம்-7 பெறப்பட்டு அதில் 22 ஆயிரத்து 682 ஏற்கப்பட்டன. 458 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தம் செய்திட மற்றும் வாக்காளரின் வண்ண புகைப்படம் இடம்பெற செய்வதற்காக 5 ஆயிரத்து 246 படிவங்கள் பெறப்பட்டதில் 4 ஆயிரத்து 853 படிவங்கள் ஏற்கப்பட்டன. 393 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன.
உரிய விசாரணை
ஒரே சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட பெறப்பட்ட 4 ஆயிரத்து 864 படிவங்களில் 4 ஆயிரத்து 704 படிவங்கள் ஏற்கப்பட்டதுடன்160 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 62 ஆயிரத்து 15 படிவங்கள் பெறப்பட்டதில் 60 ஆயிரத்து 499 படிவங்கள் ஏற்கப்பட்டு, 1,516 படிவங்கள் உரிய விசாரணைக்கு பின் நிராகரிக்கப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சை மாவட்டத்தில் 10 லட்சத்து 4 ஆயிரத்து 678 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 65 ஆயிரத்து 559 பெண் வாக்காளர்களும், 161 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 70 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 31-ந் தேதி வரை வைக்கப்படும்.
கிராமசபை கூட்டம்
மேலும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள சிறப்பு கிராமசபை கூட்டங்களிலும் இந்த இறுதி வாக்காளர் பட்டியலானது பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிழைகள் ஏதும் இருந்தால் உரிய படிவங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க தவறியவர்கள் படிவம் 6-யை தாசில்தார் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இணையதளம்
வாக்காளர் பட்டியலில் இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் படிவம் 7-யை பெற்று பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் பெயர், உறவுமுறை, வயது உள்ளிட்ட ஏதேனும் பிழைகள் இருப்பின் படிவம் 8-யை பெற்று பூர்த்தி செய்தும் வழங்க வேண்டும். ஒரே சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8ஏ-யை பெற்று பூர்த்தி செய்தும் தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.
மேற்கூறிய திருத்தங்கள் அனைத்திற்கும் nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையானது வாக்காளர்களின் முகவரிக்கே தபால் துறை மூலம் விரைவு அஞ்சல் மூலமாக நேரிடையாக அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story