போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2022 1:26 AM IST (Updated: 6 Jan 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி போராட்டக்குழுவினர் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:
கும்பகோணத்தை  மாவட்டமாக அறிவிக்கக்கோரி போராட்டக்குழுவினர் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பல்வேறு போராட்டங்கள் 
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கும்பகோணம் வியாபாரிகள், பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. 
ஆர்ப்பாட்டம் 
இந்தநிலையில் நேற்று கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவின் சார்பில் 108  தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். 
பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பொன்ராஜ்தேவர், குடந்தை வக்கீல்கள் சங்கத்தலைவர் ராஜசேகர், குடந்தை வர்த்தக சங்க தலைவர் சேகர், நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் வக்கீல் மணி.செந்தில்,  வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி.விமல் உள்ளிட்ட பலர்  முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பாளர் ஜாபர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக  கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கருப்புக்கொடி 
தமிழக அரசு புதிய மாவட்டம் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றி கடையடைப்பு செய்து எதிர்ப்பை காட்டுவது. சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது. திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள சட்டமன்ற அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன், உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், இந்துமக்கள்கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி, நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story