நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கக்கோரி தஞ்சையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கக்கோரி தஞ்சையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
தஞ்சை கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது.
போராட்டத்துக்கு கோட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பழனிச்சாமி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி கலந்து கொண்டு பேசினார்.
இளைஞர்களுக்கு பணி
போராட்டத்தில் நெடுஞ்சாலையை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களில் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.5,200 முதல் ரூ.20 ஆயிரத்து 200, தர ஊதியம் ரூ.1,900 என கணக்கிட்டு ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்து 15 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு சிறப்பு கவனம் செலுத்தி நெடுஞ்சாலைத்துறையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க வட்ட த்தலைவர் இளங்கோவன், மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story