இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை சுமந்து செல்லும் அவலநிலை


இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை சுமந்து செல்லும் அவலநிலை
x
தினத்தந்தி 6 Jan 2022 1:40 AM IST (Updated: 6 Jan 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை சுமந்து செல்லும் அவலநிலை நீடிக்கிறது

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களில் யாராவது இறந்துவிட்டால் தொண்டமாந்துறை கல்லாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்று அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யும் அவலநிலை உள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத போது எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், மழைக்காலத்தில் பிணத்தை எடுத்துச் செல்வதில் அதிகளவு சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் சமீபத்தில் பெய்த பருவ மழையின் காரணமாக கல்லாற்றில் தண்ணீர் உள்ளது. இந்நிலையில் நேற்று தொண்டமாந்துறையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது பிணத்தை உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், இந்த அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நேரம் பிணத்துடன் ஆற்றில் தடுமாறி விழுந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஆகவே, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு வேறு ஒரு இடத்தில் மயானம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும். அல்லது ஆற்றைக் கடந்து மயானத்திற்கு செல்லும் வகையில் பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story